Chola Period Hero Stone
  • கோணாப்பட்டு கிராமத்தில் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடுகல் கண்டுபிடிப்பு

    திருப்பத்தூர் அருகே உள்ள கோணாப்பட்டு கிராமத்தில் சோழர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

    தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, அமிர்தாலயா கல்வியியல் கல்லூரியின் பொருளாளர் காணிநிலம் முனுசாமி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட களப் பணியில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள கோணாப்பட்டு கிராமத்தில் சோழர் காலத்து நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:

    கி.பி.12-ஆம் நூற்றாண்டில் திருப்பத்தூர் பகுதி பிற்கால சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது.

    திருப்பத்தூர் பகுதி பொதுவாக ஆநிரை வளர்த்தல், மேய்ச்சலுக்கான சூழலை கொண்ட முல்லை நிலப் பகுதியாக இருந்ததால் ஆநிரைகளுக்காக ஏராளமான போர்கள் நடந்திருக்க வேண்டும். இப்போரில் வீரமரணம் அடைந்த வீரனுக்கு நடுகல் வைத்து இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்த நடுகல்லை இப்பகுதி மக்கள் வேடியப்பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.

    வட தமிழகம் முழுவதும் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடுகல்லை வேடியப்பன் என்ற பெயரிலேயே மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நடுகல்லில் எழுத்து பொறிப்புகள் எதுவும் இல்லை. வீரன் கையில் வில், அம்பு உள்ளன. இடையில் ஆபரணங்களுடன் கூடிய இடைக்கச்சு அணிந்துள்ளார். இடுப்பில் குறுவாள் உள்ளது. காலில் வீரக்கழல் அணிந்துள்ளார். தலை பின்புறமாக வாரப்பட்டு கொண்டை வைத்துள்ளார் என்றார்.